ஈரான் போர் காரணமாக 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கன்சர்வேடிவ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. மத்திய அரசு விதிக்கும் பல்வேறு எரிபொருள் வரிகளை நீக்குவதன் மூலம் ஒரு லீட்டர் பெட்ரோலில் 25 சென்ட் வரை குறைக்க முடியும் என அக்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடியர்கள் அதிக வரி செலுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய்மையான எரிபொருள் தரத்திற்கான வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த வரிச் சலுகை அவசியமானது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.