ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கத்தார் ஏர்வேஸ் எமிரேட்ஸ் கல்ஃப் எயார்ஆகிய மூன்று மத்திய கிழக்கு விமான நிறுவனங்களுடன் அரசாங்கம் மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக்க கருத்து தெரிவிக்கையில் விமானங்களை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட தங்களது செயற்பாடுகளுக்காக மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்துமாறு அந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
“அடுத்த வாரம் இது தொடர்பாக நாங்கள் அவர்களைத் தொடர்பு கொள்வோம். எமது அழைப்பு குறித்த அவர்களின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாங்கள் கண்டறிய விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.
மத்தள விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் திருப்திகரமாக உள்ள போதிலும் ஒரு சில விமானங்களை மட்டுமே நிறுத்தி வைக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை மற்றும் பிராந்திய பாதுகாப்பு: நாமல் ராஜபக்சவின் கருத்து
இந்தியா டுடே (India Today) மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காலி கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Dena அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இந்தியப் பெருங்கடல் ஒரு பாதுகாப்பான வலயமாக அறியப்பட்ட நிலையில், இச்சம்பவம் இப்பிராந்தியத்தின் அடையாளத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது சட்டவிரோதமானது மற்றும் தார்மீக விழுமியங்களுக்கு எதிரானது என அவர் வாதாடினார்.
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும், இதில் ஒரு பெரிய சக்தியாக இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு அணிசேரா நாடு என்ற ரீதியில், இச்சம்பவம் குறித்து அமெரிக்காவிடம் இலங்கை விளக்கம் கேட்க வேண்டும். அத்துடன், ஈரான் மாலுமிகளைத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் எவ்வித கட்டளைகளுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான முடிவை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
ஈரான் மோதல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வருவாயைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.