யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் (SLTDA) உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்து இயங்கிவரும் சுற்றுலா சேவை வழங்கும் பங்குதாரர்களுக்கு மட்டுமே இந்த விசேட எரிபொருள் விநியோகம் வழங்கப்படவுள்ளது.
தற்போதைய பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிச் சூழலிலும், நாட்டின் முக்கிய வருமான ஈட்டும் துறையான சுற்றுலாத்துறையை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசேட எரிபொருள் விநியோகத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், தமக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்கும் துறைசார்ந்த சேவை வழங்குநர்கள் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.