இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசு தீர்மானித்துள்ளது.
இது குறித்து ‘த இந்து’ நாளிதழுக்கு விசேட கருத்துத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இரண்டாம் உலகப் போர் காலத்து எண்ணெய் சேமிப்பு வசதிகளை மீளமைப்பதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோக சவால்களுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவதற்காக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்னர் இத்திட்டத்தில் இந்தியத் தலையீட்டைத் தேசிய மக்கள் சக்தி எதிர்த்து வந்த போதிலும், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விநியோகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரத்தில் நடைமுறைச் சாத்தியமான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப அம்சங்கள் விரிவாக மீளாய்வு
தற்போது எரிசக்தி அமைச்சினால் இத்திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், திட்டம் விரைவில் கேள்விப்பத்திர நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.