இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் ஏழுவகையான பொறிமுறையின் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நிலமீட்பிற்கான வலையமைப்பு தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவுக்கு வந்த சூழ்நிலையிலும் இன்று வரை குறிப்பிடத்தக்க அளவு மக்கள் தங்கள் நிலங்களுக்கான முறையான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு வேற்று இனத்தினர் மற்றும் முதலாளிகளால் திட்டமிடப்பட்ட வகையில் மக்களின் குடியிருப்பு மற்றும் ஜீவனோபாயத்திற்குரிய தொழில் இடங்கள் மற்றும் மத கலாச்சார இடங்களை சட்டரீதியாகவும் சட்டமுறையற்றும் அபகரிப்பதுடன் சுவீகரித்தும் வருகின்றது என கிழக்கு மாகாண நிலமீட்பிற்கான வலையமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் ஏழு வகையான பொறிமுறைகள் ஊடாக அபகரிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொல்லியல் இடம் எனவும் பாதுகாப்பு பகுதி வனப்பாதுகாப்பு பகுதி பூஜாபூமி வனவிலங்கு பகுதி அபிவிருத்தி சுற்றுலாபிரதேசம் எனவும் அடையாளப்படுத்தி அரசாங்கம் பல தேவைகளுக்காக இந்த நிலங்களை பயன்படுத்துகின்றது என கிழக்கு மாகாண அமைப்பு தெரிவித்துள்ளது.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில்1958 சிங்கள குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் அங்கு 32 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் என கிழக்கு மாகாண நிலமீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழர்கள் முஸ்லீம்களின் பூர்வீக இடங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அத்துடன் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த வழிபாட்டு இடங்கள் அபகரிக்கப்பட்டு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளதுடன் எங்கள் ஆலயங்களில் வழிபடுவதற்கு சிங்கள பௌத்த மதகுருமாரின் அனுமதியை பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக திரியாயை சேர்ந்த செயற்பட்டாளர் டனுசன் தெரிவித்துள்ளார்.