தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மரகத மலை’ திரைப்படம்- ராஜா ராணி காலத்தை சார்ந்த மாயாஜால கதையாக அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படைப்பாக உருவாகி உள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் லதா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மரகத மலை’ திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் , தீப்ஷிகா , தம்பி ராமையா, ஜெகன், தீரஜ் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரங்களான சஷாந்த் -அரிமா வர்மன் -கலைக்கோ வர்மன் -மஹித்ரா – உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எல். வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எல். ஜி .மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லதா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் ராஜா- தனஞ்ஜெயன் இயக்குநர்கள் ஆர் வி உதயகுமார் – ஆர் கண்ணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந் நிகழ்வில் படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” எமக்கு ராஜா ராணி கால கட்டத்தை சார்ந்த மாயாஜாலம் நிறைந்த கதைகளை வாசிப்பது பிடிக்கும். அது போன்றதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக’ மரகத மலை ‘ படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த திரைப்படத்தில் புலி ,சிங்கம், கரடி , குரங்கு போன்ற வன விலங்குகளும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடிக்க வைத்திருக்கிறோம்.
குதிரைகளை மட்டும் படப்பிடிப்பில் பங்கு பெற்ற வைத்து அதன் தொடர்பான காட்சிகளை படமாக்கினோம். வேறு அனைத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தினோம். தமிழ் சினிமாவில் முதன் முதலாக டிராகனை திரையில் காட்சிப்படுத்தி இருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் மரகத மலையை உருவாக்கி இருக்கிறோம் ” என்றார்.