அமெரிக்காவின் தேசிய கடன் தொகை 40 ட்ரில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான அந்நாட்டு நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி வெளியான அந்த அறிக்கை விபரங்களின்படி, இந்த ஆண்டின் 8 மாதங்களிலேயே கடன் தொகை 40.047 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைக் எட்டியுள்ளது.
இதில் 32.266 ட்ரில்லியன் டொலர் பொதுமக்களிடமும் 7.782 ட்ரில்லியன் டொலர் அரசுகளுக்கு இடையிலுமான கடன் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காசியாவில் இடம்பெறும் போர்ச்சூழல், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்புக்கான நிதித் தேவைகள், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதன் காரணமாக நாட்டின் கடன் மீதான வட்டித் தொகை பல மடங்கு அதிகரித்தமை போன்றவற்றினால் அமெரிக்கா இந்த வரலாறு காணாதளவு கடனை அதிகரிப்பை சந்தித்துள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2017 ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக முதன்முதல் பதவியேற்றபோது 19.95 ட்ரில்லியன் டொலராக இருந்த அமெரிக்காவின் கடன், அவர் பதவியேற்று ஒரு தசாப்த காலம் நிறைவடைவதற்குள் இரு மடங்குக்கும் அதிகமாகி, அமெரிக்கா பெரும் கடன்சுமையை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.