அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக சகல நீதிமன்றங்களின் நீதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கிகாரத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்டவரைவுக்கான ஆவணங்கள் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முன்வைத்த விசேட அமைச்சரவை யோசனைக்கு அமைக்கு சகல நீதிபதிகளினதும் பதவி காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமைச்சரவை அனுமதியளித்தது.
இந்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதற்காக நீதிமன்ற சட்டத்தை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் 107(5) பிரிவின் பிரகாரம் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுப்பெறும் வயதெல்லை 65 ஆக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புதிய யோசனைக்கு அமைய வயதெல்லை 67 ஆக நீட்டிக்கப்படவுள்ளது.
அந்தச் சட்டத்தின் இணைப்பிரிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுப்பெறும் வயதெல்லை 63 ஆக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புதிய யோசனைக்கு அமைய வயதெல்லை 65 ஆக நீட்டிக்கப்படவுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் தற்போது ஓய்வுப்பெறும் வயதெல்லை 61 ஆகவும், நீதிவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஓய்வுப்பெறும் வயதெல்லை தற்போது 60 ஆக காணப்படுகிறது. தற்போதைய புதிய யோசனைக்கு அமைய மேல் மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்களின் சகல நீதிபதிகளினதும் பதவி காலம் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்படவுள்ளது.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தில் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாவட்ட நீதிமன்ற சங்கங்கள், நீதிச்சேவை சங்கம் உட்பட நீதித்துறையுடன் தொடர்புடைய சகல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த வாரம் விசேட பொதுச்சபை கூட்டத்தை நடத்தி விசேட யோசனையை நிறைவேற்றி, அரசாங்கத்திடம் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.