சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், ஸ்கொட்லாந்தில் இன்றுபுதன்கிழமை (19) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் டென்மார்க் தோற்ற நிலையில் அந்நாடு உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.
டென்மார்க் சார்பாக றஸ்முஸ் ஹொஜ்லுன்ட், பற்றிக் டொர்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்கொட்லாந்து சார்பாக ஸ்கொட் மக்டொமினி, லோரன்ஸ் ஷங்லன்ட், கெய்ரன் டைரனி, கென்னி மக்லீன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற துருக்கியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய ஸ்பெய்னும் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. ஸ்பெய்ன் சார்பாக டனி ஒல்மோ, மிகேல் ஒயர்ஸபல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். துருக்கி சார்பாக டெனிஸ் குல், சலிஹ் ஒஸ்கன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் கொஸோவாவில் நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய சுவிற்ஸர்லாந்தும் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.