2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வுத் தகவலாளர்கள் ஆகியோரை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையிலிருந்து ‘ஸூம்’ (Zoom) தொழினுட்பம் ஊடாக மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவானால் இன்று (01) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவில் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பிள்ளையான் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வுத் தகவலாளர்களும் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டனர்.
லண்டனில் வசிப்பதாகக் கூறப்படும் நபர் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2026 ஜூன் 17 அன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
இன்றைய வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன், லண்டனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நபருக்கு திறந்த பிடியாணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டது