நிதியமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட ஊடுருவலைத் தொடர்ந்து, $ 2.5 மில்லியன் நிதி எந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) விசாரணை நடத்தி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
‘சுயாதீன சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு இதனை பகிரங்கப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு கடன் தவணையாகச் செலுத்தப்பட வேண்டிய $ 2.5 மில்லியன் நிதியை ஹேக்கர்கள் திருடியுள்ளதை நிதியமைச்சு ஒப்புக்கொண்டது.
தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்களிப்புடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையும் (AFP) இந்த விசாரணைக்கு உதவி வருகின்றது.
திருடப்பட்ட பணம் எந்தக் கணக்கிற்குச் சென்றது என்பதை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) ஆராய்ந்து வருவதாக அமைச்சர் விஜேபால ‘ தெரிவித்தார்.
“குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, நிதி புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையை முன்னெடுத்து வருகின்றது,” என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையின் பிரதிநிதிகள் குழு இதற்காக இலங்கை வருமா என்று கேட்டதற்கு, அதற்கான தேவை இன்னும் ஏற்படவில்லை என்று அவர் பதிலளித்தார்.
“நாங்கள் இன்னும் ஆரம்பகட்ட விசாரணையில் தான் இருக்கிறோம். தேவை ஏற்பட்டால், அவர்களை இலங்கைக்கு அழைப்போம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.