மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ உரையாடல் இதுவெனக் கருதப்படுகிறது.
இது தொடர்பான தகவல்களைப் பிரதமர் மோடியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோரும் தமது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது, பிராந்தியத்தில் போர்ச் சூழல் தணிந்து, அமைதி விரைவில் திரும்ப இந்தியா தனது ஆதரவை வழங்கும் என மோடி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உலக நாடுகளின் எரிசக்தித் தேவைக்கு இந்த நீர்வழிப் பாதை மிக முக்கியமானது. இது பாதுகாப்பாகவும், தடையின்றியும் இயங்குவது உலக நாடுகளின் தேவையாகும்.
இந்தியாவின் மசகு எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீத பங்களிப்பை இந்த நீரிணையே வழங்குகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய மோதல் சூழலால் வான்வழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் எரிவாயு விநியோகம் போன்ற துறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பெட்ரோலியம், உரங்கள் மற்றும் நிலக்கரி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இந்தியாவில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.