அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ்நீரிணைக்குள் (Strait of Hormuz) நுழைய அல்லது அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் “எல்லா கப்பல்களையும் முற்றுகையிடும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பேச்சுவார்த்தைகள் நன்றாகவே நடந்தன, பெரும்பாலான விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், உண்மையில் முக்கியமான ஒரே விடயமான ‘அணு ஆயுதம்’ (NUCLEAR) என்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
தடையற்ற போக்குவரத்து குறித்த உடன்பாடு ஒரு கட்டத்தில் எட்டப்படும் என்று கூறிய அவர், “யாரும் அறியாத, தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஓரிடத்தில் கடற்கண்ணிவெடிகள் இருக்கலாம் என்று ஈரான் கூறுவதன் மூலம், அந்த உடன்பாடு ஏற்படுவதை அவர்கள் தடுத்துவிட்டனர்” என்றார்.
முக்கிய உத்தரவு: ஈரானுக்கு சுங்கக் கட்டணம் (Toll) செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் தேடித் தடுத்து நிறுத்தத் தனது கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளைஅமெரிக்க கடற்படை அழிக்கத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
எச்சரிக்கை: “சட்டவிரோதமான சுங்கக் கட்டணத்தைச் செலுத்தும் எவருக்கும் சர்வதேசக் கடற்பரப்பில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “அமெரிக்கா மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் ஈரானியர்கள் எவரும் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் (BLOWN TO HELL)” என எச்சரித்துள்ளார்.
“இந்த முற்றுகை விரைவில் தொடங்கும்,” என்று ட்ரம்ப் தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஈரானுடனான மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.