ஒன்டாரியோவின் கிளாரிங்டன் (Clarington) பகுதியில் உள்ள ஹைவே 401 (Highway 401) நெடுஞ்சாலையில், வாகனம் ஒன்றிலிருந்து கழன்று ஓடிய சக்கரம் எதிரே வந்த எஸ்.யூ.வி (SUV) ரக வாகனம் மீது மோதியதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மூடப்பட்டிருந்த வீதிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை காலை 11:30 மணியளவில், கிழக்கு நோக்கிச் சென்ற வாகனம் ஒன்றின் டயர் கழன்று, மேற்கு நோக்கிய பாதையில் பாய்ந்து சென்று எதிரே வந்த எஸ்.யூ.வி வாகனம் மீது மோதியது. இதைத் தொடர்ந்து நியூட்டன்வில் வீதி (Newtonville Road) அருகேயுள்ள மேற்கு நோக்கிய பாதைகள் மூடப்பட்டதாக மாகாண பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் எஸ்.யூ.வி வாகனத்தில் பயணித்த 70 வயதான ஒரு ஆணும், ஒரு பெண்ணும் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த பெண், ஹெலிகாப்டர் (airlifted) மூலமாக அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் (OPP) தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காட்சிகளில், எஸ்.யூ.வி வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடி பெருமளவில் நொறுங்கியுள்ளதும், அதன் கூரையின் சில பகுதிகள் நசுங்கியுள்ளதும் தெரிகிறது.
“டயர் மற்றும் சக்கரப் பகுதி பாதைகளைக் கடந்து துள்ளிச் சென்று, வாகனத்தின் பயணிகள் பகுதி மீது மோதியுள்ளது. இதனால் கூரை நசுங்கி பயணிகள் பகுதிக்குள் சென்று, கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளது” என பொலிஸ் சார்ஜன்ட் கெர்ரி ஷ்மிட் (Kerry Schmidt) இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு நோக்கிச் சென்ற வாகனத்தில் இருந்து பாகங்கள் தனியாகக் கழன்று செல்லக் காரணமாயிருந்ததற்காக, அதன் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஷ்மிட் கூறினார்.
ஆரம்பத்தில் கிழக்கு நோக்கிய பாதைகளும் மூடப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவை திறக்கப்பட்டன. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு அனைத்து வீதிகளும் முழுமையாகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டன.