சமூக ஊடகங்கள் மூலம் தொடர்புகொள்ளப்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, ஹமில்டன் பொலிஸார் 24 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 16 வயதுக்குட்பட்டவர்களுடன் தொடர்புகொள்வதற்கும் அவர்களை நேரில் சந்திப்பதற்கும் பல சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தியதாகப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஹமில்டன் நகரைச் சேர்ந்த 24 வயதுடைய ஜோசுவா கிங் மெக்ரே (Joshua King Mcrea) என்பவர் ஜூலை 10 அன்று கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது பாலியல் வன்புணர்வு (sexual assault), பாலியல் குறுக்கீடு (sexual interference) மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுவரைக் கவர்தல் (luring a child) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மேலும் சில நபர்கள் இருக்கக்கூடும் என நம்பும் புலனாய்வாளர்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாள விபரங்களை வெளியிட்டுள்ளனர். அவர் 5 அடி 8 அங்குல உயரமும், தோராயமாக 132 பவுண்ட் எடையும், மெலிந்த உடலமைப்பும், கறுப்பு நிற முடியும் கொண்டவர் என விவரிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விபரங்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் ஹமில்டன் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.