கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாகப் பதிவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் மற்றும் யூடியூப், முகநூல் தளங்களுக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையைப் பெறுவதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதவானால் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஹிஜாப் உடை அணிவது தொடர்பாகச் சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது, வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராக முகநூல் ஊடாகத் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் தொடர்பான பதிவுகள் வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக, வைத்தியர் கு. சுகுணன்; பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹீம் மற்றும் யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (21) வழக்குத் தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணத்துரை தரஷினி முன்னிலையில் திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்காளி சார்பாகச் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆகியோர் ஆஜராகிச் சமர்ப்பணங்களை முன்வைத்தனர். வாதங்களைக் கேட்டறிந்த நீதவான், குறித்த வழக்கில் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு வழக்கைத் திகதியிட்டார்.