வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக வலைதள நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக் டாக் ஆகியன மீறி உள்ளதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகளவில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதனை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து, இதனை பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், வெறுப்பு பேச்சு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தகவல்கள் குறித்தும், பயங்கரவாத தகவல்கள் தொடர்பாக புகார் அளிக்கவும் தேவையான நடவடிக்கைளை எடுப்பதற்கு என ஐரோப்பிய கமிஷன் டிஜிட்டல் சேவை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், மெட்டா நிறுவனமும், டிக் டாக் செயலியும் இந்த சட்டத்தை மீறியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த குறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் தொழில்நுட்ப இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகப்பிரிவின் நிர்வாக துணைத்தலைவர் ஹென்னா விர்குன்னன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய யூனியனின் சட்டப்படி, சமூக வலை தளங்கள், தங்களின் பயனர்கள் மற்றும் சமூகத்துக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். நமது ஜனநாயகம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பயனர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதுடன், அவர்களின் உரிமையை மதிக்க வேண்டும். ஆய்வுக்கு தங்களது அமைப்பை வெளிப்படையாக வைக்க வேண்டும். இதனை டிஜிட்டல் சேவை சட்டம் கடமையாக வைத்துள்ளது. தேர்வாக வைக்கவில்லை.