திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலினும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் .திருமாவளவனும் செய்து கொண்டனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது.
இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு தமிழகத்தில் எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறு தனித் தொகுதிகளும், இரண்டு பொதுத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என திமுக சார்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
எந்தெந்த இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்பது குறித்தும் யார் வேட்பாளர் என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் திமுக கூட்டணியில் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.