விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ‘விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத சங்கீத்சனன் என்பவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் நிலைப்பாடு என்னவென்று’ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை காணப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் பாடல் பாடி, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தமைக்காகவே கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இளைஞன் கைது தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருடன் இன்றைய தினம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதன் பின்னர் சாதகமான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.