நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்றையதினம் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த சிறுவன் விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கடுவளை, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, லுனுவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனுவிலவிலிருந்து பெஸ்டஸ் பெரேரா மாவத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 18 வயதுடைய, மஹாவெவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லுனுவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், மித்தெனிய – தெபொக்கவ பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலாவவிலிருந்து தெபொக்கவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காரியமடித்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் மித்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல – எலகந்த விதியில் ஹெந்தல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்.
எலகந்தவிலிருந்து ஹெந்தல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஒரு கடையில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்தவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் வத்தளையைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சடலங்கள் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.