மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் நடைபெற்றது.
மத்திய கிழக்குப் போரினால் நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இந்த நிலைமையானது இலங்கைக்கு மாத்திரமன்றி உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை எதிர்கொள்வதில் டிஜிட்டல் குறியீட்டு முறை (QR), வீட்டிலிருந்து பணியாற்றுதல் போன்ற மாற்று வழிமுறைகளை முறையான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன், உருவாகி வரும் புதிய நிலைமைகள் குறித்து மக்களுக்குத் தொடர்ச்சியாகத் தெளிவுபடுத்தும் முறையான தகவல் தொடர்பு முறையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது நடைமுறையிலுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையின் கீழ், இதற்கு முன்னர் பதிவு செய்யாத நபர்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை விரைவாக நீக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அரச மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து கைத்தொழில் துறையில் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய சூழலானது கடந்த கொரோனா காலப்பகுதியை விடவும் மாறுபட்டது என்பதால், புதிய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி எரிபொருள் சிக்கன முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
மத்திய கிழக்குப் போர்ச் சூழலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை முறையாகக் கண்காணித்து, தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.