யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பெருமளவான மக்களின் நிலப்பரப்பை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணிகளை மக்களிடமே கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கட்டைக்காடு கோவில் பகுதியில் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை நேற்று (25.03.2026) பார்வையிட்ட பின்பே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 20ஆம் திகதி குமார் என்பவரின் கரைவலைவாடிக்கு வருகை தந்த ஐந்திற்கும் மேற்பட்ட யானைகள் 36 தென்னைகளை நாசமாக்கியதாக கேள்விப்பட்டு நிலைமைகளை பார்வையிட இங்கே வருகைதந்தேன். நான் அறிந்தவரை குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை.
முதல் தடவையாக காட்டு யானைகள் வந்து பெருமளவான தென்னைகளை நாசம் செய்துள்ளன. இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆகவேதான் அதனை பார்வையிட பங்குத்தந்தை என்னும் ரீதியில் இங்கே வருகை தந்துள்ளேன்.
இதெல்லாம் எங்கள் மக்கள் காலாகாலம் வாழ்ந்த அவர்களுடைய பூர்விக காணிகள் மக்கள் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காணிகளை எல்லாம் தேசிய பூங்கா என்று கூறி கடந்த கால அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் அடையாளப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்கின்ற ஒரு கைங்கரியத்தை தான் இங்கே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதைத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம். 2009ஆம் ஆண்டுக்கு பிற்பாடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடக்கு கிழக்கிலே நடந்து கொண்டிருக்கின்றன. அரச திணைக்களங்கள் ஊடாக இந்த கைங்கரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த பிரதேசத்திற்கும், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
இங்கே காட்டு விலங்குகள் இல்லை, அடர்ந்த காடுகள் இல்லை, இந்த பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய பகுதி என்று கூறிக் கொள்வதற்கான எந்த சான்றுகளும் இல்லை. எனவேதான் கிராம மக்களுக்கு எழுகின்ற சந்தேகம் எனக்கும் இருக்கின்றது என கூறியுள்ளார்.