இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது, எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில் நேற்று (10.03.2026) கொக்குவிலிலுள்ள செல்வாபலஸில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்து விசேட உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தாங்குதிறன் ஆகியவற்றைக் கொண்டாடும் இந்த விசேட நிகழ்வில் பங்கேற்பதில் நான் பெருமையடைகின்றேன். எழுச்சி பெறும் வடக்கு மாகாணத்தின் வாழும் சாட்சிகளாகத் திகழும் வெற்றியாளர்களைக் கொண்டாடும் ஒரு பெருவிழாவாகவே இது அமைந்துள்ளது.
புதிய விடயங்களை உருவாக்குவதற்கும், புத்தாக்கங்களைப் புகுத்துவதற்கும், சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தொழில்முனைவோராகிய உங்களுக்கு இருக்கும் தைரியத்தை நாம் மனதாரக் கௌரவிக்கின்றோம். தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளமையானது, பிராந்திய சுபீட்சத்தின் மீதான எமது கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.
வடக்கு மாகாணம் முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதிலும், உள்ளூர் வர்த்தகங்கள் செழித்தோங்குவதற்கான அடிப்படை உட்கட்டமைப்புகளை வழங்குவதிலும் அதிகார சபையின் அசைக்க முடியாத ஆதரவு மிக முக்கியமானது. தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவானது, ஒரு மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக நாம் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கான சிறந்த சான்றாகும்.
ஆளுமை விருத்தி, நிலைபேறான வளர்ச்சி மற்றும் உள்ளூர், உலகளாவிய சந்தைகளில் போட்டியிடுவதற்குத் தேவையான வளங்களை எமது தொழில்முனைவோருக்கு இணைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய பாலமாக இது அமைந்துள்ளது. இன்று விருதுகளை வென்றவர்களே, நீங்கள்தான் எமது பொருளாதார எதிர்காலத்தின் சிற்பிகள்.
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகச் சந்தை போன்ற முன்னெடுப்புகள், யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றம் மற்றும் தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவுடன் நீங்கள் அடைந்துள்ள வெற்றியானது, அடுத்த தலைமுறையினரின் இலட்சியங்களுக்குப் பெரும் உந்துசக்தியாக அமையும்.
இலங்கைத் தீவின் செழிப்பான பொருளாதார மையமாக ஒருகாலத்தில் விளங்கிய வடக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பெருமையை நீங்கள் மீண்டும் நிலைநாட்டுகின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் ஆற்றல் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதுடன், உங்களின் ஒவ்வொரு நகர்விலும் நாம் உங்களுக்குத் துணையாக நிற்போம் என உறுதியளிக்கின்றேன்.” – என்றார்.
இவ்விசேட நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய்முரளி, தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர, யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தின் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.