யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெறுகின்றது.
இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட பகுதிகளில் 15 கிராம சேவையாளர் பிரிவுகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும்.
அந்த நிலையில் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுக்கப்பட்டுள்ள நிலையில் , மற்றைய பகுதி விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த நிலங்களில் இராணுவத்தினர் தோட்டங்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விமான நிலையத்திற்கு மேற்கு பக்கம் உள்ள பகுதியில் பெருமளவான பனை மரங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டு , இராணுவத்தினர் தாம் விவசாயம் செய்வதற்காக அந்த நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் தமது காணிகளில் உள்ள பனை மரங்களை அனுமதியின்றி தறித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டங்கள் அறவிடப்படும் நிலையில் , இராணுவத்தினரால் பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனை தடுத்து நிறுத்தி பனை வளங்களை பாதுகாக்க வேண்டும். பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக மாவட்ட செயலர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோர் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.