யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா திடீரென பதுளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம், வடக்கில் நீதித்துறையை அரசாங்கம் அடக்க முயல்கிறது என்பதை உணர்த்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், இந்த இடமாற்றத்திற்கு நீதிபதி கையாண்ட வழக்குகளே காரணம் என குற்றச்சாட்டியுள்ளது. மேலும், வட மாகாண ஆளுநர் மற்றும் ஒரு அமைச்சர் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பத்தகுந்த முறையில் அறிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி அலெக்ஸ் ராஜா, பருத்தித்துறை நகர சபை விவகாரம் மற்றும் வடக்கில் முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நீதியின் பக்கமாக செயற்பட்டதால், அரசாங்கத்திற்கு அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
“மாற்றம்” என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், கடந்த அரசாங்கங்களை விட மோசமாக நீதித்துறையின் மேல் அடக்குமுறை மேற்கொள்வதாக ஆசிரியர் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.