மொராக்கோவில் கடந்த சில நாட்களாக புயல் காற்றுடன் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதலான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொராக்கோவின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, நான்கு மாகாணங்களிலிருந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை (4) அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லூக்கோஸ் நதி (Loukkos River) நிரம்பி வழிந்தோடத் தொடங்கியதைத் தொடர்ந்து, Ksar el-Kebir நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நீர்த்தேக்கங்களிலும் அவற்றின் கொள்ளளவை எட்டி, நீர் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீரை வெளியேற்றி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தாழ்வான நகர்ப்புறங்களில் வெள்ள நிலைமை மேலும் மோசமாக காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
வெள்ளம் காரணமாக நகர்ப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் 70 சதவீதமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக Ksar el-Kebir நகரின் மேயர் முகமது எஸ் – சிமோவ் (Mohammed Es-Simou) கூறியுள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், லூக்கோஸ் நதியை அண்மித்த பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது என்றும் தற்போது பெய்துவரும் கனமழை மேலும் தொடர்ந்தால் அதிக ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.