சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப்பங்கீட்டை (Tranche) எதிர்வரும் மே 27 ஆம் திகதி பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய பிரதி அமைச்சர், ஏற்றுமதிகள், வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் (Foreign remittances) மற்றும் சர்வதேச நிதி உதவிகள் ஊடாக நாட்டின் வெளிநாட்டு நாணய உள்வரவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை (IMF Executive Board), இந்த மாத இறுதியில் 700 மில்லியன் டொலர் பெறுமதியான அடுத்த நிதிப்பங்கீட்டை விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் எனத் தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) இந்த வருடத்திற்குள் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, உலக வங்கியிடமிருந்து (World Bank) 150 மில்லியன் டொலர்களையும், அதனுடன் இணைந்த நிறுவனமொன்றிடமிருந்து மேலும் 50 மில்லியன் டொலர்களையும் நாடு எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வெளிநாட்டு நாணய நிலவரத்தைக் கையாள்வதில் அரசாங்கம் எவ்வித பாரிய சிரமங்களையும் எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.