சென்னை:
மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது குறித்து விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரைத் திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியைப் பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 64 சதவீத நீர் இருப்பு உள்ள நிலையில், ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு நியாயப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் கர்நாடகத்திற்கு இருந்திருந்தால் மற்ற அணைகளில் இருந்தும் தண்ணீரைத் திறந்து விட்டிருக்கலாம். ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரைத் தேக்கி வைக்க முடியாது என்பதால் மட்டுமே வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹாரங்கி, ஹேமாவதி அணைகளின் நீரைத் தமிழகத்திற்குத் தராமல் கிருஷ்ணராஜசாகர் அணையில் தேக்குவது கர்நாடகத்தின் வஞ்சக எண்ணத்தைக் காட்டுகிறது என்றார்.
கர்நாடக அரசால் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால், தற்போது கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூடத் தமிழ்நாட்டுக்குக் கிடைக்காது என்று அன்புமணி எச்சரித்துள்ளார். மேகதாது அணை நிரம்பித் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும். எனவே, மேகதாது அணையைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேளாண் அமைப்புகளின் கருத்துகளை அறிந்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
#AnbumaniRamadoss #MekedatuDam #CauveryIssue #PMK #TamilNaduGovt #Karnataka #KabiniDam #BmNews #TamilNews #BreakingNewsTN #DeltaFarmers #PoliticalUpdate #TamilNewsLive