சென்னை:
காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்கிறார் எனத் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டி.கே.சிவக்குமாருக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கும் கட்சியைத் தாண்டிய நல்ல உறவு இருப்பதாகக் கூறினார். இதனால் திமுக என்ன சொல்கிறதோ அதைத்தான் டி.கே.சிவக்குமார் செய்கிறார் என்றும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என அவர் பல வகைகளில் விரும்புவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதைவிட மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் அவர் அதிகம் கேட்பார் என்றும் நிர்மல்குமார் விமர்சித்தார்.
கருணாநிதி காலத்திலும் ஜெயலலிதாவிற்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தண்ணீர் தரவிடாமல் கர்நாடக அரசுக்கு முட்டுக்கட்டை போட்டார்கள் என்றும், அதே அரசியலைத்தான் இப்போதும் திமுக செய்கிறது என்றும் அவர் கடுமையாகச் சாடினார். மேகதாது விவகாரத்தில் நேற்று காலை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனைகளை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று முடிவெடுத்தவுடன், மாலை 5 மணிக்கு அவசரமாகத் திமுக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரே மாநிலத்தில் இவ்வாறு பல வழக்குகளைப் பதிவு செய்வது குழப்பத்தை விளைவித்து, மாநிலத்தின் உரிமையைப் பின்னோக்கித் தள்ளும் என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும், கடந்த 30 ஆண்டுகளாகக் காவிரி நீர் பிரச்சனையில் குழப்பத்தை ஏற்படுத்தியது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்தான் என்று குற்றம் சாட்டிய அமைச்சர் நிர்மல்குமார், எம்.எல்.ஏ பேர விவகாரத்தில் பணம் பெங்களூருவில் பிடிபட்டதைச் சுட்டிக்காட்டி, திமுகவுக்கு பெங்களூரு பாதுகாப்பான இடமாக உள்ளதா? என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு 17 டி.எம்.சி காவிரி நீர் வர வேண்டியுள்ள நிலையில், விநாடிக்கு 3,500 கன அடி என்பது எந்த வகையிலும் போதாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#MinisterNirmalKumar #MKStalin #DKShivakumar #CauveryIssue #TVKGovt #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #CMVijay #DMK #PoliticalUpdate #TamilNewsLive