தஞ்சாவூர்:
“மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழித் திட்டத்தையோ முந்தைய திமுக அரசு எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதே உறுதியான நிலைப்பாட்டைத் தான் தற்போதைய தவெக அரசும் பின்பற்ற வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் பல்வேறு அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், முதலமைச்சர் விஜய் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒருவர் சொன்ன கருத்து குறித்து ஆதரித்தோ, மறுத்தோ பேசும் வழக்கம் எனக்கு இல்லை. ஆனால், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பி.எம்.ஸ்ரீ மற்றும் மும்மொழித் திட்டங்களை இந்த அரசு ஏற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார். மேலும், அதிமுக-வில் இருந்து பிரிந்து வந்த அணியினருக்குத் தவெக அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட உள்ளதா என்ற கேள்விக்கு, யூகங்களுக்குத் தம்மால் பதில் சொல்ல முடியாது என மறுத்துவிட்டார்.
தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பேசிய அவர், “நீட் தேர்வு விவகாரத்தில் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல், தவெக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 உயர்வு குறித்துப் பட்ஜெட்டுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என ஒரு அமைச்சர் கூறியுள்ளார், எனவே அதுவரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டார். மேலும், நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ள சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்துப் பேசுகையில், “இதைவிடத் தொன்மையான செப்பேடுகள் சோழ மண்டலத்திலேயே பல இடங்களில் இன்னும் உள்ளன; அவற்றை முறைப்படி கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு” என வைகோ வலியுறுத்தினார்.
#VaikoSpeech #MDMK_Leader #ThreeLanguagePolicy #VijayAsCM #BreakingNews #May18 #ThanjavurNews #TamilNaduPolitics #TVK_Government #NeetScam2026 #DharmendraPradhan #ResignEducationalMinister #CholaCopperPlates #WomenRightsFund #SocialJusticeTN #AntiHindiImposition #CentralGovernmentIssues #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`