முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்கிரமரத்ன தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு விசேடவிசாரணையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘தினமிண’ அரச பத்திரிகையின் செய்திப்படி, பொலிஸ் சட்ட அதிகாரி பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், மேல் மாகாண தெற்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் துப்பாக்கிச் சூட்டினால் தான் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது தற்கொலையா அல்லது தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பான தெளிவு இனிவரும் தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் இருந்தே கிடைக்கும் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, விக்கிரமரத்னவின் நெஞ்சில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், தோட்டா அவரது முதுகு வழியாக வெளியேறியுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அவரது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்டுக்குரியதாகும். முன்னாள் பொலிஸ் மா அதிபர் சைக்கிள் பயிற்சிக்குச் செல்வதற்கு முன் துப்பாக்கியைப் பரிசோதிக்கக் கேட்டதாக அந்தச் சார்ஜன்ட் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் குடிநீர் போத்தல்களை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற சில கணங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுள்ளது.
அச்சமயத்தில் விக்கிரமரத்னவின் மனைவியும் இளைய மகனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். சத்தம் கேட்டு அவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, அவர் கீழே விழுந்து கிடப்பதையும், அருகில் துப்பாக்கி கிடப்பதையும் கண்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச்சடங்கு, பூரண அரசு மற்றும் பொலிஸ் மரியாதைகளுடன் இன்று (20) நடைபெறும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.