நானுஓயா சமர்செட் பகுதியில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதப்படுத்தும் மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டதோடு, கழிவுகளை சேகரித்துக் எடுத்துச் செல்வதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களும் புதன்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பதப்படுத்தும் நிலையமும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கரவண்டி (Electronic Tree-Wheeler) மற்றும் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது.
வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று எந்த விதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கும் நவீன வசதிகளுடனான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் கணிசமாகக் குறைத்தல், மறுசுழற்சியை ஊக்குவித்து சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் மாசடைவதைக் குறைத்தல் என்பன இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக இந்த மையத்தின் மூலம் பிரதேசவாசிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த வேலைத்திட்டமானது குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கொகாகோலா (Coca-Cola) நிதியுதவியுடன் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclersஉடன் கைகோர்த்து ஹேலிஸ் பெருந்தோட்ட பங்குதாரர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.