தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி 2,300க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் அமைதி வழி போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,
2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சேவையில் இணைந்த கிராம உத்தியோகத்தர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இவர்கள் சேவையில் இணைந்த காலம் முதல் தொடர்ச்சியாக அநீதிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், புதிய சேவை யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் இந்த நிலைமை மேலும் தொடர்கிறது.
கடந்த காலங்களில் குறித்த விடயம் தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் பல முறை கலந்துரையாடப்பட்டு இருந்தாலும், இதுவரை முறையான தீர்வுகள் கிடைக்கவில்லை. மாறாக கால தாமதப்படுத்தும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டது.
இந்த அமைதிப் போராட்டமானது எதிர்வரும் 3 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு ஏனைய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் சங்கங்களும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
மேலும், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதியுடன் குறித்த ஆண்டில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர்கள் 17 வருட சேவையை பூர்த்தி செய்யவுள்ளனர். தற்போது சேவையிலுள்ள கிராம உத்தியோகத்தர்களில் சுமார் 25 சதவீதமானோர் இந்தப் பிரச்சினையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு தகுந்த கவனம் செலுத்தப்படாவிட்டால், வருகின்ற காலங்களில் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு கிராம உத்தியோகத்தர் குழுவினர் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.