மனிடோபாவின் ‘லிட்டில் சஸ்காட்செவன்’ பழங்குடியினக் குடியிருப்புப் பகுதியில் (Little Saskatchewan First Nation) அரங்கேறிய தொடர் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஜேம்ஸ் மேட்வயாஷிங் (James Maytwayashing – 31) என்ற நபருக்கு எதிராக மனிடோபா RCMP பொலிஸார் அவசரக் கைது வாரண்ட் (Arrest warrant) பிறப்பித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் இக்கொடூர சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்து அரங்கேறிய வன்முறைகள்:
RCMP பொliஸாரின் ஆரம்பகட்ட விசாரணை விபரங்களின்படி வன்முறைகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன:
-
முதலாவது தாக்குதல்: நள்ளிரவு 12 மணியைக் கடந்த சில நிமிடங்களில், 33 வயதுடைய பெண் ஒருவர் தனக்கு நன்கு தெரிந்த ஒரு நபரால் (சந்தேக நபரால்) கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
-
கரடித் தடுப்புத் தெளிப்பு (Bear Spray) தாக்குதல்: இதன்போது, பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அங்கு வந்த அவரது 31 வயது பெண் உறவினர் மீதும் சந்தேக நபர் தாக்குதல் நடத்தியதுடன், அவர் மீது ‘பியர் ஸ்பிரே’ எனப்படும் கரடித் தடுப்பு நச்சுத் திரவத்தைத் தெளித்துத் தப்பியுள்ளார்.
-
துப்பாக்கி முனையில் கடத்தல்: அதன் பின்னர், அங்கிருந்த மற்றொரு பெண்ணைக் கைத்துப்பாக்கி (Handgun) முனையில் மிரட்டி, அவரது காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சந்தேக நபர், காரின் உள்ளே 30 வயதுடைய மற்றொரு பெண் பயணி இருந்த நிலையிலேயே காரைச் செலுத்திக் கடத்திச் சென்றுள்ளார்.
கார் மீட்பு – பாதிக்கப்பட்டவர்களின் நிலை:
சந்தேக நபரால் கடத்தப்பட்ட அந்த வாகனம் பின்னர் ‘அஷெர்ன்’ (Ashern) பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த பெண் பயணி பொலிஸாரிடம் கூறுகையில், சந்தேக நபர் ஒரு வீட்டிற்கு அருகில் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடியதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தான் காரைச் செலுத்திக் தப்பித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மூன்று பெண்களுக்கும் மருத்துவக் குழுவினரால் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மறுத்துவிட்டனர்.
பொலிஸாரின் அவசர எச்சரிக்கை: தேடப்படும் குற்றவாளியான ஜேம்ஸ் மேட்வயாஷிங் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் எவராவது இவரைக் கண்டால் எந்தவொரு காரணத்திற்காகவும் அவரிடம் நேரடியாகச் செல்லவோ அல்லது நெருங்கவோ வேண்டாம் என்றும், உடனடியாக அவசர உதவி இலக்கமான 911 ஐத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
தகவல்களை வழங்க வேண்டிய விபரங்கள்:
சந்தேக நபர் இருக்கும் இடம் அல்லது நடமாட்டம் குறித்த ஏதேனும் துல்லியமான விபரங்கள் தெரிந்தவர்கள், RCMP பொலிஸாருக்கு 204-659-5224 என்ற இலக்கத்தின் மூலமாகவோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பிற்கு 1-800-222-8477 என்ற இலக்கத்தின் மூலமாகவோ தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விதிமுறைகளின்படி, இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்டத்தின் முன்னிலையில் நிரபராதியாகவே கருதப்படுவார்