வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட ‘பொருளாதார கண்காணிப்புக் குழு’, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழிலமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்குழுவின் செயலாளராகவும் அழைப்பாளராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயற்படுகிறார்.
இக்கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.