‘பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109-வது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது. இத்துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ஆம் திகதி ஆரம்பமானது.
போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 49 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டமான நேற்று (14), தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
தொடர்ந்து 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பத்திரிசியார் கல்லூரி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலையில் (Draw) முடிவடைந்தது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் எஸ்.கே. ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதுவரை நடைபெற்ற 109 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 35 தடவைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. ஏனைய 32 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அந்நிபந்தனைகள் எவை என்பதைக் கூற மறுத்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிடும் அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமான ‘கார்க்’ (Kharg) தீவை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், வேடிக்கைக்காக அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும் என்றும் இதன்போது கூறியுள்ளார்.