எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகப் புதிய அரச நியமனங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சில விசேட நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், வடக்கு மாகாணம் அதில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எமது மாகாணத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குறித்து நாம் விரிவாகத் தெரியப்படுத்தினோம். அதன் பயனாக, கௌரவ பிரதமர் தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, ஆராயப்பட்ட பின்னரே தற்போது புதிய நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் சாரதி சேவை மற்றும் அலுவலகப் பணியாளர் சேவைகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு எமக்கு அனுமதி கிடைத்திருக்கவில்லை. எனினும், கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போது இந்த விடயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அப்போது கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் உடனிருந்தார். அவர்கள் இருவரதும் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று இந்த நியமனங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்த நியமனங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றியும், பரிந்துரைப் பட்டியல்களுமின்றியும் உங்கள் தகுதியின் அடிப்படையில் மாத்திரமே உங்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் இப்படி ஒரு நேர்மையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
குறிப்பாக, சாரதி நியமனம் பெற்றுள்ள நீங்கள் அரச அதிகாரிகளைப் பொறுப்புடன் ஏற்றிச் செல்லப் போகின்றீர்கள். எனவே, நீங்கள் எப்போதும் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும், அதியுயர் ஒழுக்கத்துடனும் கடமையாற்ற வேண்டும். நீங்கள் ஒரு கணம் நிதானிக்கத் தவறினாலும் அது மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திவிடும்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண மாவட்டத்தை விட ஏனைய நான்கு மாவட்டங்களிலுமே ஆளணிப் பற்றாக்குறையும், சேவையின் தேவையும் அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, வடக்கு மாகாணத்தின் எந்தவொரு பகுதியிலும் பணியாற்றுவதற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.