கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, கிராஞ்சி ஆகிய கிராமங்களில் சுன்னக் கல் அகழ்வு, கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (28) கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மையான பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்ற பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மேற்படி கிராமங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுதல், கணிய மணல் அகழ்தல், சுண்ணக்கல் அகழ்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேரவில் வைத்தியசாலை முன்றலில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு, கிராஞ்சி கற்பகப் பிள்ளையார் ஆலயம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “எங்களுடைய வளங்களை அகழாதே”, “எமது நிலம் எமக்கு வேண்டும், காற்றாலை வேண்டாம்” என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக நகர்ந்து சென்றனர்.
இதில் பிரதேச பங்குத் தந்தை வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத்தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.