ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) தேசிய தெரிவுக்குழு கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் புதிய தேசிய தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கமைய, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய தெரிவுக்குழு மாற்றப்படவுள்ளது.
இவ்விடயம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், பதவியிலிருந்து விலகும் தற்போதைய தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் நீக்கம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இம்மாற்றத்தை தெரிவுக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் ‘நியூஸ்வைர்’ (NewsWire) ஊடகத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன தலைமையிலான புதிய தெரிவுக்குழுவொன்று விளையாட்டுத்துறை அமைச்சரினால் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கபில விஜேகுணவர்தன இதற்கு முன்னரும் இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவில் பணியாற்றியுள்ளார் என்பதுடன், அவரே இந்த புதிய தோற்றத்திலான குழுவிற்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தத் தெரிவுக்குழு மாற்றங்கள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சோ அல்லது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமோ இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது