முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ அதிர்ச்சி தோல்வியடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடு தான் தன்னுடைய தோல்விக்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போல்சனாரோ, அர்ஜென்டினாவுக்கு தப்பியோட முயற்சித்தார். ஆனால், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையே, போல்சனாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தை குறைக்கும் மசோதா பிரேசில் பார்லியில் கொண்டு வரப்பட்டது. கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மேல்சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தலைநகர் பிரேசிலியா உள்பட ப்ளோரியானோபொலிஸ், சல்வடோர், ரெசிப் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
‘மன்னிப்பு இல்லை’ என்று கோஷம் எழுப்பினர். மேலும், கீழ் சபையின் சபாநாயகர் ஹூகோ மோட்டோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் வெளியேற வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதனால், பிரேசிலின் முக்கிய நகரங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.