ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானியப் பிரதமர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த நகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான ‘HMS ஆன்சன்’ என்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடந்த மார்ச் 06 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.
இது தற்போது ஹோமுஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வடக்கு அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
சுமார் 1,600 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் டொர்பிடோ ரக ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவிற்குப் பிரித்தானியா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள பின்னணியில் இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.