பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ரயில் பயணிகள் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டனுக்கு செல்லும் ரயிலில் பயணித்தவர்கள் மீது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களது நிலைமை குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்தவிட்டனர். ” தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார். எங்கே பார்த்தாலும் ரத்தம்” என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். இந்த கத்திக்குத்து சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் கண்டித்து உள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹண்டிங்டன் அருகே ஒரு ரயிலில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கேர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.