விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பிலான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடையை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் கட்டளையிட்டது.
கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னரான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்க மன்னரின் அரண்மனைக்குச் சொந்தமான, குண்டசாலை உடமலுவ தொல்பொருள் தளத்தில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரவட்டக்கல் எனும் தொல்பொருள் சின்னத்தைத் திருடியது தொடர்பான விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவிடாது தடுத்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சில சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல உதவியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழேயே இவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.