சென்னை
பாஜக என்ற கேன்சர் வியாதியை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆட்சியில் இருந்து வீழ்த்துவோம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு:
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
அம்பேத்கர் அனைவருக்குமானவர்:
இம்மாநாட்டில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “உலகில் எங்கும் உண்மையான ஜனநாயகம் இல்லை. ஒருமுறை நண்பர் வீட்டிற்குச் சென்றபோது அங்கு அம்பேத்கர் படம் இருப்பதைப் பார்த்து, ‘இது தலித் வீடு’ என என்னுடன் வந்தவர் கூறினார். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இவர்களைப் போன்ற ஒடுக்குமுறையாளர்கள் வரக்கூடாது என்றுதான் அம்பேத்கர் சட்டத்தை எழுதினார்; அவர் சட்டம் எழுதியது ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமானது” என்றார்.
ரீல்ஸ் போடும் பிரதமர் மோடி:
தொடர்ந்து பேசிய அவர், “பல நூறு ஆண்டுகளாகப் பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்டும், குழந்தை திருமணங்கள் நடந்தும் நம் நாடு அவலநிலையில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் பணக்காரர்களும் மன்னர்களும் மட்டுமே நிம்மதியாக இருந்தனர். ஆனால், இன்று பிரதமர் மோடி ‘ரீல்ஸ்’ செய்து கொண்டிருக்கிறார். நான் இன்றைய இளைஞர்களை முழுமையாக நம்புகிறேன். அரசியலமைப்புச் சாசனத்தைப் படித்தால் இந்தியாவில் என்ன அரசியல் செய்ய வேண்டும் என்பது தெளிவாகப் புரியும்,” என்று கடுமையாக விமர்சித்தார்.
கேன்சர் வியாதியான பாஜக:
“ஒரு குடிமகனாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நாம் துணிச்சலாகக் கேள்வி கேட்க வேண்டும். சரியாக வேலை செய்யவில்லை என்றால் பதவியை விட்டு நீக்குவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதைத்தான் இன்றைய இளைஞர்கள் செய்துள்ளனர். எதிர்க்கட்சி வெல்லும் என்பதை விட, ஆளுங்கட்சி மீதான கோபத்தில் இந்த கேன்சர் வியாதியை (பாஜக) இன்னும் மூன்று வருடத்தில் ஆட்சியில் இருந்து இறக்குவோம்; அதன்பின் மற்ற வியாதிகளையும் சரி செய்வோம்,” என ஆவேசமாகக் கூறினார்.
நீட் முறைகேடு போராட்டம்:
முன்னதாக, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற பெயரில் நடைபெற்ற நூதனப் போராட்டங்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாகப் பங்கேற்றுத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#PrakashRaj #BJP #PMModi #ConstitutionProtectionMovement #ChennaiYMCA #BRAmbedkar #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #NationalPolitics