மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையின் கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். பழைய முறைமையின் கீழ் அந்தத் தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லையேல் தேர்தல் மேலும் இழுத்தடிக்கப்படக்கூடும். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையே நாம் விடுக்கின்றோம். மாகாண சபை முறைமை மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
எனினும், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு மாகாண சபை முறைமை அவசியம். அதனை நான் ஏற்கின்றேன். அதற்குரிய நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.