நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதங்களில் நேபாளம் கடுமையான அரசியல் பதற்றத்தை எதிர்கொண்டது. இந்த போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் நிலைமை கட்டுக்குள் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்த கே.பி. சர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை தற்காலிகமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களாக இடைக்கால நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் பாடகராகவும் சமூக ஊடகங்களில் பிரபலமானவராகவும் அறியப்படும் பாலேந்திர ஷா களமிறங்கினார். கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக நடைபெற்ற இளைஞர் போராட்டங்களில் இந்தக் கட்சி முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுவதுடன், 110 உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், தேர்தலில் வெற்றி பெற்று பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு அமைந்த பின்னர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.