‘நெட்ப்ளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்தால், அது ஓ.டி.டி., சந்தையில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உலகளவில் ஓ.டி.டி., எனப்படும், ‘ஆன்லைன்’ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் தளங்களில், ‘நெட்பிளிக்ஸ்’ முன்னிலை வகிக்கிறது.
இதேபோன்று, ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவானாக உள்ளது.
இந்நிலையில், ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனத்தை, 9.72 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க, ‘நெட்பிளிக்ஸ்’ ஒப்பந்தம் போட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் திரைப்படங்கள், ‘சூப்பர்மேன், பேட்மேன்’ தொடர்கள் உட்பட, ‘டிவி’ நிகழ்ச்சிகள் தயாரிப்பு பிரிவு, ‘எச்.பி.ஓ., மேக்ஸ்’ ஓ.டி.டி., தளம் ஆகியவை, ‘நெட்ப்ளிக்ஸ்’ கீழ் வரும்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், உலகின் மிகப்பெரிய, ‘ஸ்ட்ரீமிங்’ நிறுவனமாக, ‘நெட்ப்ளிக்ஸ்’ உருவெடுக்கும்.
ஆனால் இந்த ஒப்பந்தம், வரும் காலத்தில் பிரச்னையாக மாறலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி.யில் நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி., தளம் ஏற்கனவே மிகப்பெரிய சந்தை மதிப்புடன் உள்ளது. ‘வார்னர் பிரதர்ஸ்’ உடன் சேர்ந்தால் அது இன்னும் பெரிதாகிவிடும். இது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும். இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூடிப்பேசி முடிவெடுப்பர். இந்த ஆலோசனையில் தனிப்பட்ட முறையில் நானும் பங்கேற்பேன்,” என்றார்.
‘நெட்பிளிக்ஸ்’ உலகம் முழுதும், 30 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை வைத்துள்ளது. ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனத்துக்கு, 13 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்தால், ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் சந்தையில் மிக அதிகமான பங்கை கைப்பற்றிவிடும். மிகப்பெரிய சந்தை மதிப்பு ஒரே நிறுவனத்திடம் இருந்தால், போட்டி குறையும், விலையை இஷ்டம் போல் நிர்ணயிக்க முடியும், சிறிய நிறுவனங்கள் வாழ முடியாது என்பதே டிரம்பின் கருத்து. இதனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.