பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்கு எதிரான விசாரணைக்கு அமெரிக்கா பிரான்ஸ் சிங்கப்பூர் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கின என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதமநீதவான் நீதிமன்றின் முன்னிலையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் காரணமாகவே சந்தேகநபர் நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எயர்பஸ் பணபரிமாற்றம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா சிங்கப்பூர் கனடா அமெரிக்காவின் உதவியுடன் இந்த விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.ஒவ்வொரு விமானத்திற்கும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய எயர்பஸ் பணப்பரிமாற்றத்தின் போது சிங்கப்பூரின் ஸ்டான்டர்ட் சார்ட்டெட் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு எயர்பஸ் இலஞ்சமாக 1.454 மில்லியன் யூரோக்களை வைப்பிலிட்டுள்ளது.இந்த வங்கி கணக்கு ஸ்ரீலங்கா எயர்லைன்சின் முன்னாள் பிரதமநிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவி;ன் மனைவி பிரியங்கா விஜேநாயக்கவிற்கு சொந்தமானது.
அந்த வங்கிக்கணக்கிலிருந்து 2014 நவம்பர் 19ம் திகதிக்கும் 22ம் திகதிக்கும் இடையில் சிங்கப்பூரின் ஓசிபிசி வங்கியில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வங்கி கணக்கு நிமால் பெரேரா என்பவரின் சப்ரே விசன் ஹொல்டிங்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கு என அவர் தெரிவித்துள்ளார்