இலங்கையின் பிரபல கானா பாடகரான நவகம்புர கணேஷ் என அழைக்கப்படும் முத்துலிங்கம் கணேஷ் அவர்களின் பூதவுடல் இன்று (2025.12.01) மாலை கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் ஏராளமான கலைஞர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் கடந்த சனிக்கிழமை (2025.11.29) தனது 60வது வயதில் காலமானார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான அமரர் நவகம்புர கணேஷின் பூதவுடல், நேற்றுமுன்தினம் (2025.11.30) கொழும்பு 14, நவகம்புரவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்றைய தினம் (2025.12.01), கலைஞர்களின் அஞ்சலிக்காக பூதவுடல் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள “சுதர்ஷி” கலாசார நிலையத்தின் “கலைஞர் காமினி பொன்சேகா” ஞாபகார்த்த மண்டபத்தில் இறுதியஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிங்கள கலாச்சார நிறுவனத்தின் இந்த மண்டபத்தில் தமிழ் கலைஞர் ஒருவருக்கு இறுதியஞ்சலி நடந்தேறியது வரலாற்றில் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, அன்னாரின் பூதவுடல் அங்கிருந்து கொழும்பு-14ல் அமைந்துள்ள மாதம்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாலை 5.00 மணியளவில் அங்கு தகனக் கிரியைகள் இடம்பெற்றன.
கலைப் பயணம்: உச்சம் தொட்ட “மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி” பாடல்
கொழும்பின் கலை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்த நவகம்புர கணேஷ், தனது கலை வாழ்க்கைப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரபல இசைக்கலைஞர் “தாஸின் – கலைவாணி” இசைக்குழுவில் ஆலயங்களில் பக்திப் பாடல்களைப் பாடி ஆரம்பித்தார். பின்னர், இசை மேடைகளில் கானா பாடல்களைப் பாடிப் பெரும் புகழடைந்தார்.
அவர் பாடிய பாடல்களில், குறிப்பாக “மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி” என்ற பாடல் மிகவும் பிரபல்யமடைந்து, நவகம்புர கணேஷ் என்ற பெயரை உச்சத்தை தொட வைத்தது. அத்துடன், அவர் பல மேடைகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் இசையமைப்பாளர் தேவாவின் கானா பாடல்களையும் பாடி வந்தார்.
அங்கீகாரமும் கௌரவமும்
சிறிது காலமாக சுகவீனமுற்று தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நவகம்புர கணேசுக்கு, அண்மையில் கொழும்பு பிரதேச செயலகம் நடத்திய கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் “அரச சாஹித்திய விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுவே அவர் தனது கலை வாழ்வின் உச்ச அங்கீகாரத்தைப் பெற்ற இறுதி நிகழ்வாக அமைந்தது.
நவகம்புர கணேசின் மறைவு இலங்கை கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
By C.G.Prashanthan