சென்னை:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாகச் சிக்கல் நீடித்து வரும் நிலையில், அண்மையில் டெல்லியில் நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவைக் காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதி செய்தது. இருப்பினும், கர்நாடக அரசு போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுத்து வந்தது.
இந்நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, 84 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலையை எட்டியுள்ளதால், தமிழ்நாட்டிற்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிரடியாக அதிகரிக்கப்பட்டது. அணைகள் நிரம்புவதால் உபரி நீரைத் திறந்து விடுவததைத் தவிர வேறு வழியில்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், “நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்” எனத் தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது. எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்ணனின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகத் தெரிவித்த அமைச்சர் கீர்த்தனா, இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
#MinisterKeerthana #CMVijay #CauveryWater #KabiniDam #DeltaFarmers #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduGovt #CauveryDispute #PoliticalUpdate #TamilNewsLive